திருநெல்வேலி: மேலப்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 1) திடீரென பள்ளி வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் நுழைந்து, அதிக சத்தத்துடன் வீலிங் செய்து, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிக் காவலர் பள்ளியின் கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளார். இதனால், இருசக்கர வாகனத்தில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மாணவர்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இது குறித்த தகவலை பள்ளி காவலர் மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளி வாளகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த மாணவர்களை பிடித்தனர். பின்னர், இதுகுறித்த தகவலை அவர்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீலீங் செய்த மாணவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
18 வயதிற்கு கீழ் இருக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றம் என்று இருக்கும் நிலையில், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுத இருப்பதினால், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்து, இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டோம் என்று கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: "பெங்களூரு குண்டுவெடிப்பை அரசியலாக்க வேண்டாம்" - கர்நாடக முதல்வர் சித்தராமையா!