சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில், இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட் பலர் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர், துறை தலைவர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், அதில் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போதுதான் வருகைப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு மணிநேர ஆய்வக பயிற்சி இருந்தது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொறியியல் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு என்பது தேர்விற்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?