சென்னை: இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவத்தில் மாணவர்கள் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 5) நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுதும் மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைக்குp பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்படி, சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்குள் சென்ற மாணவிகள், தலையில் போட்டிருந்த ரப்பர் பாண்டு கழற்றிய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி வளாகத்திற்குள் உள்ள கேன்டின்திறந்திருக்கும் எனவும், அதில் மாணவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்காக பெற்றோர் பணம் கொடுத்து அனுப்பவும் அறிவுறுத்தினர். 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சியில் படித்த 12 ஆயிரத்து 730 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுா்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு www.nta.ac.in என்ற இணையதளத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா தவிர்த்து, 14 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட நகரங்களில் நாளை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். இதில் 12 ஆயிரத்து 730 மாணவர்களில், 3 ஆயிரத்து 647 மாணவர்களும், 9 ஆயிரத்து 94 மாணவிகளும் எழுதுகின்றனர்.
மேலும், சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் நீட் தேர்வு எழுதுகிறார்.