மதுரை: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், கல்விக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி, மதுரையில் ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு, ஐந்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் பண நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து மாணவி மரியாதை செலுத்தியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை செல்லூரில் அரசு உதவி பெறும் மனோகரா நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பு பயிலும் உஷா என்கிற மாணவி தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் பால். ஜெயக்குமாருக்கு ஆசிரியர் தினத்தையொட்டி ,ஐந்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் பண நோட்டுகள் கொண்ட பண மாலையை அணிவித்து மரியாதை செய்துள்ளார். மேலும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பேனா மற்றும் சாக்லேட் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவி உஷா கூறுகையில், “எனது பள்ளியின் தலைமை ஆசிரியர், செல்லூர் பகுதியில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களில் வறுமையில் உள்ள மாணவ, மாணவியருக்கு தன்னுடைய சொந்த செலவில் குறிப்பேடுகள், உபகரணங்கள் அனைத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும், முதியோர் உள்ளிட்ட ஆதரவற்றோர்க்கு பல்வேறு உதவிகளை பள்ளியின் விடுமுறை நாட்களில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சேவையில் உழைத்துக் கொண்டிருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவைக்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் பண மாலையை அணிவித்தேன்” என தெரிவித்துள்ளார். மாணவியின் இச்செயல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும்" - முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ்!