சென்னை: மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் ஒருவர் கடந்த 5ஆம் தேதி இரவு பேருந்தில் ஏறிச் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணை நோட்டமிட்டவாறு, அதே பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
பின்னர் அப்பெண் மதுரவாயல் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்ல மதுரவாயல், ஆலப்பாக்கம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் பெண்ணை பின் தொடர்ந்து சென்று தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
உடனே அந்த பெண் காவல் கட்டுப்பாட்டறைக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற மதுரவாயல் காவல் நிலைய போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் ஆந்திரா மாநிலம் ரெட்டி சொனாங்கி மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) என்பதும், பேருந்தில் பயணம் செய்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
அதன் பேரில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சந்தோஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு..மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்!