சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.
இந்த நிலையை களையக் கோரி, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச்செய்தார்.
புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023-ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு, அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனாலும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 19-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறும் முற்றுகை போராட்டம்போல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (பிப்.28) முற்றுகை போராட்டம் நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்திக்குறிப்பு ஒன்றை நேற்றைய தினம் (பிப்.27) வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், 10-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் இன்று (பிப்.28) அனைத்து மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து போராடும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி, முதலமைச்சர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை, நாளை (பிப்.29) முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேங்காய் கொள்முதல் விலை தொடர் சரிவு.. போடி விவசாயிகள் வேதனை!