குழிமந்தி சிக்கன், ஷவர்மா விவகாரம்: கெட்டுப்போன சிக்கனை கண்டுபிடிப்பது எப்படி? - மருத்துவர் கூறும் அட்வைஸ்! - Risks of eating spoiled chicken - RISKS OF EATING SPOILED CHICKEN
Risks of eating spoiled chicken: இறைச்சியை எவ்வாறு சாப்பிட வேண்டும், அவற்றை உண்பதால் ஏற்படும் பாதிப்பு அறிகுறிகள் என்ன என்பது குறித்து எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம்.
Published : May 29, 2024, 12:59 PM IST
சென்னை: சில மாதங்களுக்கு முன்னதாக ஷவர்மா சாப்பிட்டு பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்டு பல்வேறு நபர்கள் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கெட்டுப்போன சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் விளக்கியுள்ளார். அதில், "கேரளாவில் 'குழிமந்தி' சிக்கன் சாப்பிட்டு ஒருவர் உயிரிழப்பு மற்றும் 80க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி என்று கேள்வி பட்டோம். முன்னதாக ஷவர்மா சிக்கன் சாப்பிட்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் பல்வேறு நபர்கள் இறந்தனர்.
பழைய சிக்கன்: ஷவர்மா சிக்கன், குழிமந்தி சிக்கன் என்பது கணக்கில்லை. அவை அனைத்தும் பழைய சிக்கன்களாகும். அறை வெப்பநிலையில் (Room temperature) அதிக நேரம் வைத்து அவற்றை உண்பதால் ஏற்படும் இறைச்சியை 1 - 2 மணிநேரத்தில் சமைத்து உண்பது நல்லது. நேரம் கடக்கும் பட்சத்தில் கறிகளில் கிருமிகள் சேர்ந்து, வளர்ந்து, இனப்பெருக்கம் அடைந்து ஒரு சில நச்சுப்பொருள்களை (Toxin) உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரியா போன்ற நச்சுப்பொருள்களை உண்பதால் அவை உடலுக்குள் சென்று வளர்ந்து, பல்வேறு மடங்காக பெருகி, இரத்தம் முழுவதும் கலப்பதினால் வருவது செப்சிஸ் (Sepsis).
கெட்டுப்போன சிக்கனை கண்டறியும் முறை: வழக்கமாக இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கறிகள், சாம்பல் (Gray) நிறத்தில் மாறும். வழக்கத்தை காட்டிலும் அதிக மணம் அவற்றிலிருந்து வீசும். ஆனால், அதிகளவில் மசாலா பொருள்கள் கறிகள் கெட்டுப்போயுள்ளதை மறைக்கும் அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவை கெட்டுப்போயுள்ளதை கண்டறிய முடிவதில்லை.
கோடையில் அதிக இனப்பெருக்கம்: மற்ற காலங்களில் ஒப்பிடுகையில் கோடைக் காலங்களில் அதிகளவில் இனப்பெருக்கம் அடைகிறது. இதனால், இவற்றை உண்ணும் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
பாதிப்பு அறிகுறிகள்: குமட்டல், வாந்தி, மயக்கம், உடல் வியர்த்தல், பேதியால் உடலில் நீர்ச்சத்து குறைதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாகும். எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் இதிலிருந்து மீட்கப்படுகின்றனர். இதில், உடனடியாக மருத்துமனைக்குச் சென்றால், ரத்த குழாயின் சிறை வழியாக drips செலுத்தி காப்பாற்றப்படுவார்கள்.
அப்படி இல்லையென்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் குறைவதால் ரத்தஅழுத்தம் (BP) குறைகிறது. இதனால், உடலுறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டங்கள் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோன்று, நச்சுக்கிருமிகள் உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கல்லீரல் செயலிழப்பு, இதய செயலிழப்பு செய்து உடலை அமிலத்தன்மையாகி உடல் முழுவதும் பரவி ஆபத்து உண்டாகிறது.
தடுப்பு வழிமுறைகள்: எந்த இறைச்சியாக இருந்தாலும் புதியதாக, 2 மணி நேரத்தில் பயன்படுத்த வேண்டும். சமைத்த பிறகும் 1 அல்லது 2 மணிநேரத்திற்கும் மேலாக வெளியில் இருக்கும் பட்சத்தில், அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் (fridge) வைப்பது சிறந்தது. அவற்றின் வெப்பநிலை முறையாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அவற்றை 2 நாட்களுக்கு மேலாக உண்ணுதல் கூடாது.
இறைச்சிகளை பயன்படுத்தும் முன்னதாக அவற்றில் நிறம் மாற்றம் உள்ளதா? மணம் உள்ளதா? என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். எனவே, பதபடுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கறிகளை உண்பதை தவிர்த்தல் மற்றும் கடையில் உண்பதை தவிர்த்தல் வேண்டும். மாறாக வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தை காத்திடுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன? - Amoebic Brain Fever Disease