விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என சில மாணவிகள் புகார் எழுந்தது. இது தொடர்பாக, நிர்மலா தேவி பேசியதை ரெக்கார்ட் செய்து பெற்றோர் மூலம், கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பேராசிரியராக பணியாற்றிய நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 2018 ஏப்ரலில் காவல் துறையினர் அவரையும், அவரோடு இக்குற்றங்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் என 3 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் 3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 29) இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அதில், உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்துள்ள நீதிபதி தண்டனை விபரங்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.1.5 கோடி கொள்ளை.. ஆவடி நகைக்கடையில் பரபரப்பு சம்பவம்!