தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயில் புளியங்குடி பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வெகு சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த வருடமும் திருவிழாவானது கடந்த செப் 18ம் தேதி தொடங்கி இன்று வரை மூன்று நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து முதல் நாள் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியும், இரண்டாம் நாள் 1008 பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வந்த 500 புனித நீர் தீர்த்த குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
மூன்றாம் நாளான இன்று(செப் 20) கோயிலின் சிறப்பு நிகழ்வான நாக்கில் சூடம் ஏற்றி வழிபட்டு பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மதியம் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து தங்கியிருந்து மூலவரான ஸ்ரீ ஆரியங்காவு கருப்பசாமியை வழிபட்டு சென்றனர்.
இதையும் படிங்க : தனக்கு தானே திதி கொடுக்கும் விநோத கோயில்.. பீகாரில் மட்டும் சாத்தியமாவது எப்படி? - Hindu Tithi for self in bihar
இதுகுறித்து கோயிலில் நாக்கில் சூடம் ஏற்றி குறி சொல்லும் நபரான ராமச்சந்திரன் பூபதி கூறுகையில், "கோயில் நிர்வாகம் பக்தரிடம் எந்த விதமான காணிக்கைகளையும் எதிர்பார்ப்பதில்லை. மேலும், இக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் எவ்வளவு பெரிய கஷ்டங்களில் இருந்தாலும், அவர்களுக்கு விபூதி வழங்கி அவர்களின் குறைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆரியங்காவு கருப்பசாமிக்கு அசைவ படைப்பு கிடையாது.
இக்கோயிலில் உயிர் பலி கொடுப்பது கிடையாது. மற்ற கருப்பசாமி கோயிலில் உயிர் பலி கொடுக்கப்படும். ஆனால், இக்கோயிலில் நான்கு தலைமுறையாக உயிர் பலி கொடுத்ததே கிடையாது. மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவே அநேக பேர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இதுவே இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். கோயிலுக்கு ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் வந்து பலனடைந்து செல்கின்றனர்" என்கிறார் ராமச்சந்திரன் பூபதி.