திருநெல்வேலி: தமிழகத்தில் நாளை மறுதினம் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அரசியல் கட்சிகளின் இறுதி கட்டப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எங்கு திரும்பினாலும், பிரச்சார ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த ஓசைகளையே அறியாத காணி பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது. இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில் காணி பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
இதில் 'இஞ்சிக்குழி' என்ற கிராமம் காரையாறு அணைக்கு மேல் சுமார் 15 கி.மீ. தொலைவில் தென்பொதிகை மலையில் நடுகாட்டில் அமைந்துள்ளது. சுற்றிப் பார்த்தால் அடர்ந்த மரங்களும் நீர் ஓடைகளும் தான் அங்கு காட்சி அளிக்கின்றன. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில்தான் தமிழகத்தின் வற்றாத ஜீவந்தியான தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலை அமைந்துள்ளது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது, வெறும் 7 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். காணி பழங்குடியின மக்கள் இங்கு வாழை, மிளகு, கிழங்கு போன்ற விவசாயம் செய்தும்; தேன் எடுத்தும் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
இஞ்சிக்குழி பகுதிக்கு செல்ல எந்த ஒரு வாகன வசதியும் கிடையாது. சுமார் 4 கி.மீ. பரப்பளவு கொண்ட காரையாறு அணையை கடந்துதான் இஞ்சிக்குழிக்கு செல்ல வேண்டும். அணையைக் கடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது படகில் ஆள்களை ஏற்ற மறுப்பதால் காணி பழங்குடி மக்கள் மிக மிக ஆபத்துடன் மூங்கில் மற்றும் பைக் டயரால் 'சங்கடம்' கட்டி அணையை கடக்கின்றனர்.
இஞ்சிக்குழி மக்கள் அரிசி, பருப்பு உள்பட தங்களுக்கு தேவையான அத்தியாவச பொருட்களை வாங்குவதற்காக வாரம் ஒருமுறை யானை, கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளுக்கு மத்தியில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுதான் காரையாறு பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் தான் தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இஞ்சுக்குழி மக்களுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் சென்று சேரவில்லை.
தேர்தலில் 'ஒரு ஓட்டு' கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியை கொண்டிருப்பதால், அந்த ஒரு ஓட்டைக் கூட வீணடிக்கக் கூடாது என அரசியல் கட்சியினர் கருதுவார்கள். குறிப்பாக, 'மண்டேலா' எனும் திரைப்படத்தில் ஒரு ஓட்டை மையமாக வைத்து படம் முழுவதும் காட்டியிருப்பார்கள். ஆனால், இஞ்சிக்குழியில் சுமார் 18 வாக்காளர்கள் இருந்தும், அங்கு இதுவரை யாரும் ஓட்டுக் கேட்டு பிரச்சாரத்துக்கு வரவில்லை. அரசு சார்பிலும் ஓட்டுப் போட வரும்படி எந்த அழைப்பும் விடுப்பதில்லையாம்.
ஓட்டுப் போட 2 நாட்களுக்கு முன்பே காட்டுப்பயணம்: இருப்பினும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களிப்பதற்காக இஞ்சுக்குழி மக்கள் கீழே இறங்கி வரத் தொடங்கியுள்ளனர். காரையாறு அணை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது. இங்குதான் இஞ்சுக்குழி மக்கள் உள்பட அனைத்து காணி பழங்குடி மக்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இஞ்சுக்குழி மக்கள் ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வருகின்றனர்.
இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, சுமார் 25 கி.மீ. சவாலான காட்டு பயணம் மேற்கொண்டு கீழே இறங்கி வருகின்றனர். அவர்கள் காரையாறு அருகே சின்ன மைலாரில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கிவிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஓட்டுப் போட முதலைகள் வாழும் அணையைத் தாண்டி பயணம்: இது குறித்து இஞ்சிக்குழியைச் சேர்ந்த காணி பழங்குடி மக்கள் கூறுகையில், 'நாங்கள் நடுக்காட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு ஏற்கனவே எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வனத்துறையினர் படகு தர மறுப்பதால் மிகச் சிரமத்தோடு அணையைக் கடந்து எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். செல்லும் வழியில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இருப்பினும், எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் இஞ்சிக்குழியை விட்டு எங்களால் கீழே இறங்கி வரமுடியாது. நாங்கள் தொடர்ந்து அங்கேயே வசிக்கிறோம்.
வேட்பாளர் யார் என தெரியாது; இருந்தாலும் ஓட்டுப் போடுவோம்: ஓட்டுப் போடுவதற்காக தற்போது தேர்தலில் வாக்களிப்பதற்காக கீழே வந்துள்ளோம். 100% வாக்களிக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வு செய்கிறது. ஆனால், எங்கள் பகுதியில் இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. வேட்பாளர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. யாரும் பிரச்சாரத்துக்கும் வருவதில்லை. நாங்கள் இதுவரை ஓட்டு போட்டும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. எம்பி, எம்எல்ஏக்கள் என யாரும் எங்களைத் தேடி காட்டுக்குள் வருவதில்லை. நாங்களாக தான் ஓட்டு போட வருகிறோம்.
ஓட்டுப் போட செல்வதற்கு வாகன வசதி தேவை: காட்டில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, எங்களை அங்கிருந்த அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோர்கள், இங்கு தான் வசித்தனர். எங்கள் பூர்வீகத்தை விட்டு எங்களால் வர முடியாது. பிற நேரங்களில்தான், எங்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அரசு சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் வனத்துறையின் ஜீப் வந்து செல்வதற்கான வழித்தடங்கள் இருக்கிறது. எனவே, அரசு நினைத்தால் எங்களை வாகனத்தில் அழைத்து செல்லலாம். எனவே, வரும் காலங்களில் ஆவது தேர்தல் அன்று மட்டுமாவது எங்களுக்கு வாகன வசதி செய்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணி பழங்குடியின மக்களின் கோரிக்கைகள்: வேட்பாளர் யாரென்றே தெரியாது..ஓட்டு கேட்டும் யாரும் வருவதில்லை..ஆனாலும் ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்கிற காணி பழங்குடி மக்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரப்போகும் திருநெல்வேலி எம்பி அப்பகுதியில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024