சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 547 வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளும் அடங்கும். இந்த பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசிற்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க பல்வேறு வழிமுறைகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த பேருந்துகளை, தமிழக பதிவு எண்ணாக மாற்றுவதற்கான நடவடிக்கையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பாக 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
அதனை முழுமையாக பின்பற்றாத சூழ்நிலையில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க தடை என கடந்த ஜூன் 12ஆம் தேதி போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து இருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆமினி பேருந்துகள் இயங்கக்கூடாது. ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், கால அவகாசம் நீட்டிப்பது குறித்து போக்குவரத்து ஆணையரிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முறையீடு செய்தால், அவர் அது குறித்து முடிவு எடுப்பார்" என தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து 15, 16, 17 ஆகிய நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகளை இயக்க கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் பதிவு எண்ணை மாற்றுவதற்கான நடவடிக்கையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுக்க உள்ளதாகவும் அதனால் இனி போக்குவரத்துத் துறையிடம் கால அவகாசம் கேட்பதாக இல்லை என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாளர்கள் மிக குறைவாக உள்ளதால் தங்களுக்கு காலதாமதம் ஆகின்றது. எனவே பதிவு எண்ணை மாற்றுவதற்கான சிறப்பு முகாமை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் எங்களுக்கு இலகுவாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு.. காஞ்சிபுரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!