கோயம்புத்தூர்: கோடை காலத்தில் வெயிலைச் சமாளிக்க கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின் மக்களுக்கு மோர், தர்பூசணி பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் கோயம்புத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கோடை காலங்களில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்திலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதை தீர்க்கக் கூடிய கட்சி அதிமுக தான்.
மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் நம்பிக்கை, தமிழ்நாட்டின் எதிர்காலம் எடப்பாடி பழனிசாமி தான். எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் கண்டிப்பாக தெரியவரும். தமிழ்நாட்டு மக்கள் பல பிரச்சினைகளில் இருக்கின்றனர். கரோனா காலங்களில் மக்களுக்காக செயல்பட்டது அதிமுக தான். அந்த அடிப்படையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கண்டிப்பாக அமையும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், புலியகுளம் பகுதிகளிலும் நீர் மோர் பந்தல் அதிமுக சார்பில் திறக்கப்பட்டது. ஆனால், கோவை மக்களவைத் தொகுதி முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்துச் சென்றார்.
இதையும் படிங்க: 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! - MK Stalin On Summer Actions