சென்னை: கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகள் ஏற்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அதில் கள்ளச்சாராயம் குடித்த சுமார் 60க்கும் மேற்பட்ட நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டைப் பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக ஆட்சியின் மீது குற்றம் சாட்டி, கடும் கண்டனங்களை முன் வைத்தனர்.
இதையடுத்து கள்ளச்சார விவகாரத்தை தடுக்க தவறியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் மாவட்ட எஸ்பி ஆக இருந்த சமய் சிங் மீனா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு 2 மாத காலம் ஆகிய நிலையில், தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த தமிழநாடு அரசு மீண்டும் அவருக்கு புதிய பணி பொறுப்பை வழங்கி உள்ளது. அதாவது, சமய் சிங் மீனாவிற்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் போக்குவரத்துத் துறை ஆணையராகப் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொறுப்பேற்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்