திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஏப்.15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்காக, அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று(ஏப்.10) நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் வருகைக்காக இந்த மைதானம் தயார் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஆய்வாளர்கள் மகேஷ் குமார், சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து, வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகம், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்துப் பேசினார். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.
இதையும் படிங்க: "அம்மா ஜெயலலிதா; மணல் விற்பனையில் ரூ.4 ஆயிரம் கோடி" - வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? - Lok Sabha Election 2024