தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிட்ட சௌமியா அன்புமணி தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய தருமபுரி, முத்துகவுண்டன் கொட்டாய், சவுளூர், கொளத்தூர், குண்டலபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இன்று காலை நேரில் சென்று தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் "தருமபுரி தொகுதியில் நான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் என்னை நம்பி வாக்களித்து தாயுள்ளத்தோடு என்னை அரவணைத்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும் தங்களுடன் பணியாற்றிய கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். எப்பொழுதும் தனது சேவை தொடரும் எனவும் நான் ஏற்கனவே தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் திட்டம், காவிரி உபரிநீர் திட்டம், குடிநீர் பாசன திட்டம் முதலிய திட்டங்களை கொண்டு வரத் தொடர்ந்து போராடப்போவதாகத் தெரிவித்தார்."
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த அவர் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த சம்பவத்தை முன்கூட்டியே அரசு வெளியே கொண்டுவந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்பு நடந்திருக்காது என்றும் மூடி மறைத்ததால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய அவர் தருமபுரி மாவட்டத்தில் இளம் பெண்கள் கைக்குழந்தைகளுடன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன்களை இழந்து கைம்பெண்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே தலைவிரித்தாடும் போதைப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணீரில் கள்ளக்குறிச்சி! 'முதலமைச்சரே ராஜினாமா செய்க..அரசையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துக' - ஈபிஎஸ் கடும் தாக்கு