சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஒரு ஆண்டில் தென்மேற்கு பருவ மழையின் பொழிவு என்பது இயல்பாக 43.8 மில்லி மீட்டர் அளவில் பெய்து இருக்க வேண்டும். இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை பெய்த அளவு 97.3 மில்லி மீட்டர் என பதிவாகியுள்ளது. எனவே, இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவு தமிழகத்தில் இயல்பைவிட 122 விழுக்காடு அதிகமாக பதிவாகியுள்ளது.
இதில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக மழை பதிவான இடமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. இயல்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60.1 மில்லி மீட்டர் மழை பெய்து வந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் 204.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தபடியாக சென்னையில் அதிக அளவு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இயல்பாக சென்னையில் தென்மேற்கு பருவமழையின் அளவு 52.9 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், இந்த ஆண்டில் 198 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காவிரியில் குளித்த கொடைக்கானல் இளைஞர்கள்! அள்ளிச்சென்ற அலையால் சடலமாக மீட்பு