திருநெல்வேலி: இந்திய ரயில்வே துறையை சேர்ந்த ஐஆர்சிடிசி சார்பில் நெல்லையிலிருந்து புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் அடுத்த ஜூன் 6ஆம் தேதி தேதி தொடங்கி 9 நாட்கள் காசி, திரிவேணி, கயா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருப்பதாக ஐஆர்சிடிசியின் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்தியேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை (Bharat Gaurav Tourist Train) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரயிலில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. இதில், ஐஆர்சிடிசி தென் மண்டலம் சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை(PUNYA THEERTHA YATHIRAI) என்ற பெயரில் சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம், கயா மற்றும் அயோத்தியா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் எவ்வளவு?: இந்தப் பயணம் வரும் 6ஆம் தேதி நெல்லையில் தொடங்கி 9 நாட்கள் அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த சுற்றுலா பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு கட்டணமாக ரூ.18,550 வசூலிக்கப்படும். இதில் தங்குமிடம், உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, பயண காப்புறுதி மற்றும் சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி ஆகிய சிறப்பு அம்சங்கள் செய்து கொடுக்கப்படுகிறது.
மத்திய மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால் எல்டிசி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரயிலில் பயணம் செய்ய irctctourism.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அக்னிபான் சோதனை எதற்கு? அடுத்த இலக்கு இதுவா? சென்னை ஐஐடியின் பிரத்யேக தகவல்கள்! - Agnibaan Sorted Launch