மதுரை: ரயிலில் தவறவிட்ட ஐ-பேடை, ரயில்வே உதவி எண் 139 வாயிலாக தெற்கு ரயில்வே மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து பயணி தெரிவித்த நன்றி கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, வாடிக்கையாளருடைய பின்னூட்டம் சிறப்பான சேவைக்கு வழி வகுக்கிறது என்று நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பதியில் இருந்து மதுரை வரை பயணம் செய்துள்ளார். இதன்படி, மதுரையில் இறங்கிய முத்துகிருஷ்ணன், தன்னுடைய விலை உயர்ந்த ஐ-பேடை ரயிலில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். இதனால், உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொண்டு, தனது ஐ-பேடை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடைப்படையில், மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், உடனடியாக அந்த ஐ-பேடை கண்டுபிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், இது குறித்த தகவலை முத்துகிருஷ்ணனனுக்கு தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், முத்துகிருஷ்ணன் மானாமதுரை சென்று, அவரது ஐ-பேடை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன், ரயில்வே நிர்வாகத்தை பாராட்டியும், மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார். வாடிக்கையாளருடைய பின்னூட்டம் மேலும் சிறப்பான சேவைக்கு வழி வகுக்கிறது என தெரிவித்து, அந்த நன்றி கடிதத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அது தமிழகத்தில் எடுபடாது... ஈபிஎஸ் விமர்சனம்! - Lok Sabha Elections 2024