ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள லாந்தை கிராமம் ரயில்பாதையில் ரூ.17.32 கோடி செலவில் மேம்பாலம் கட்ட மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டாலும், இதன் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் முடியவடையாத சுரங்கப்பாதைக்கான பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தார்.
ரயில் விபத்துக்களைத் தவிர்க்க லாந்தை கிராமம் அருகே 2016ஆம் ஆண்டு ஒரு சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சுரங்கப்பாதை மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவில், சத்திரக்குடி - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே 4.5 மீட்டர் அகலத்தில் 3.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதாக இருந்தது. 2019 ஆண்டே இதற்கான சதுர கான்கிரீட் அமைப்பு பொருத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இணைப்பு சாலைப் பணிகளும் முடிவடைந்தன.
50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாலும் மழைநீர் தேங்குவதாலும் சுரங்கப்பாதை அமைக்க லாந்தை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சுரங்கப்பாதை பணி பாதிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரையை வெளியேற்றுவதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன. தற்போது மழைக்காலம் வருவதற்கு முன்பு சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரைக் கடத்துவதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது.
சுரங்கப்பாதையில் மழைநீரைக் கடத்த குழாய்கள் பதிப்பது, லாந்தை கிராமப்பகுதியில் இணைப்பு சாலை, சுற்றுச்சுவர் எழுப்புதல், இணைப்புச் சாலை ஓரங்களில் சிறிய மழைநீர் வடிகால் அமைப்பது, மழைநீரை சேகரிக்க கிணறு அமைப்பது, சேகரிக்கப்பட்ட நீரை அருகிலுள்ள ரயில்வே பாலத்திற்குக் கொண்டு செல்வது, மழைநீர் சுரங்கப்பாதைக்கு வராமல் தடுக்க மேற்கூரை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே இந்த சுரங்கப்பாதைக்காக, ரூ.1.73 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தோடு கூடுதலாக அமைய இருக்கிற இந்த சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் மழைக்காலத்தில் கிராம மக்கள் பாதுகாப்பாக ரயில்பாதையைக் கடந்து சென்று வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உதவும் சுரங்கப்பாதைப் பணிகளை வருகின்ற மழைக் காலத்திற்குள் முடிப்பதற்கான ஒத்துழைப்பை லாந்தை கிராம மக்கள் வழங்க வேண்டும் எனக் கோட்ட ரயில்வே மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நிற்காமல் சென்ற ரயில்; பதறிய பயணிகள் - நெல்லையில் நடந்தது என்ன?