கடலூர்: வளைகாப்பு விழாவுக்காக சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் சங்கரன்கோவில் சென்ற 7 மாத கர்ப்பிணி, ஓடும் ரயிலில் இருந்து பூவனூர் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், இறந்த கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இறந்த கர்ப்பிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது. பிரேதப் பரிசோதனையின் முடிவில் ஆண் குழந்தை என்று தெரிய வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சென்னைக்கு அருகே உள்ள திரிசூலம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் கோட்டாட்சியர் சையத் மேகமுது விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னை - கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் பயணி ஒருவர் தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் குறித்து, விருத்தாசலம் இரயில்வே போலீசார், விபத்து விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று (மே 2) மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, கொல்லம் விரைவு ரயில் விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், ரயில் விருத்தாசலத்துக்கு முன்னதாக பூவனூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்த கஸ்தூரி என்ற கர்ப்பிணி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
அப்போது, கஸ்தூரி ரயிலில் இருந்து விழுந்ததைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக ரயிலில் உள்ள அவசர கால சங்கிலியை இழுக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வேலை செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், பக்கத்துப் பெட்டியில் உள்ள அவசர கால சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் ரயில் சில கிலோமீட்டர் தொலைவு கடந்துள்ளது.
இதனையடுத்து, அவரது உறவினர்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கி அந்த பெண்ணைத் தேடியுள்ளனர். ஆனால், அந்த பெண் அங்கு கிடைக்கவில்லை. இதனால், ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையம் சென்றடைந்தது. இரவு 8.10க்கு வர வேண்டிய ரயிலானது, 8.30 மணிக்கு விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் உறவினர்கள், கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார், எனவே அவரை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என ரயில்வே போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, விருத்தாச்சலம் போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி இறந்த நிலையில் தண்டவாளம் அருகே இருந்துள்ளார். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாச்சலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வளைகாப்பு விழாவுக்காகச் சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் சங்கரன்கோவிலுக்கு கஸ்தூரி சென்றுள்ளார். 7 மாத கர்ப்பிணியாக உள்ள கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பயணித்த ரயில் பெட்டியின் வாசல் பகுதிக்குச் சென்று, கதவு ஓரத்தில் நின்றபடி ரயிலுக்கு வெளியே வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கஸ்தூரிக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கஸ்தூரி நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி வெளியே விழுந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் போலீசார் கஸ்தூரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் கோட்டாட்சியர் சையத் மேகமுது விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்பு அகற்றம்.. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சாதனை! - LED Bulb Stuck In Boy Lung