மதுரை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை செப்டம்பர் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஊட்டி வரை செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06030) அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
The service of following Special #trains will be extended with same composition, maintenance schedules, Stoppages and timings to clear extra rush of the passengers during #Diwali #festival
— Southern Railway (@GMSRailway) September 3, 2024
Advance Reservation for the above Special trains are open#SouthernRailway pic.twitter.com/Doybh8LyJQ
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் - 06029) அக்டோபர் 7, 14, 21, 28, நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும்.
அதேபோல், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஆகஸ்ட் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் பயணிகளின் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து இரவு 6.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06070) செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் - 06069) செப்டம்பர் 13, 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். தற்போது இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது" என அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்