மதுரை: முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரம் அறுபடை வீடுகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவது வழக்கம். அது மட்டுமன்றி, அறுபடை வீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி என நான்கு படை வீடுகள் மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ளன.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே அதற்கான அறிவிப்பை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலையிலிருந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சிறப்பு ரயில் அனைத்து பெட்டிகளும் (20 பெட்டிகள்) 2ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்டதாக இயக்கப்படவுள்ளது. இதில், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.385, சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.470 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, சென்னையிலிருந்து மதுரை செல்லும் அனைத்து முக்கிய ரயில்களிலும் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இந்த சிறப்பு ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரயில் (வண்டி எண் 06051) சென்னை எழும்பூரிலிருந்து நாளை (மார்ச் 23) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு நாளை மறுநாள் (மார்ச் 24) காலை 11.15 மணியளவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் (வண்டி எண் 06052) திங்கட்கிழமை (மார்ச் 25) இரவு 10 மணியளவில் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (மார்ச் 26 செவ்வாய்) காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் மூலம், பங்குனி உத்திரத் திருவிழாவுக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பெரிதும் பயனடைவர். மேலும், நாளை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் செல்லும் பாண்டியன், முத்து நகர், நெல்லை அனந்தபுரி உள்ளிட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது காத்திருப்போர் பட்டியலால் நிரம்பி வழிகிறது.
முன்னதாக, அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பாக, அதன் நிர்வாகிகள் அருண்பாண்டியன், கணேசன், சண்முகம், கிருஷ்ணா ஆகியோர் மார்ச் 24ஆம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு எழுத 13 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்.. மார்ச் 25 முதல் இலவச பயிற்சி! - TN Free Neet Coaching