சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு செய்பவர்கள் தங்களின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். அதன்படி, தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிமுக சார்பில் ஜெ.ஜெயவர்தன், திமுக சார்பில் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், பகுஜன் சமாஜ் கட்சி ஜி.பிரகாஷ் ராபர்ட், மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏ.கே.டி.எல்லப்பன், வீரோ கே. வீர் இந்தியக் கட்சி சார்பில் எம்.முனுசாமி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் எஸ்.குட்டி மணி, சுயேச்சையாக ஆர்.ரவிச்சந்திரன், ஏ.பாபு உள்ளிட்ட 14 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்: ரூ.21.55 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. மேலும், ரூ.9 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்துக்கு அசையா சொத்துகளும் உள்ளன. அவரது மனைவி ஸ்வர்ண லட்சுமி பெயரில் ரூ.55 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளது. மேலும் தங்கம் அவரிடம் 100 கிராம், அவரது மனைவியிடம் 912 பவுன், அவரது மகள் ஜெயஸ்ரீ பெயரில் 3 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளது. தனது பெயரில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 38 ஆயிரம் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு கடனாகச் செலுத்த வேண்டி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்: கையிருப்பில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 211 ரூபாயும், வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.69 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 1,270 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளன. மேலும், ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காரும், இருசக்கர வாகனங்கள் (2011ஆம் ஆண்டு வாங்கப்பட்டவை) 28 ஆயிரத்து 250 மதிப்பிலும், ரூ.1 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
மேலும், அசையா சொத்துகளான ரூ.1 கோடியே 65 லட்சத்து 48 ஆயிரத்து 170 மதிப்பில் 49.75 ஏக்கர் விவசாய நிலம், ரூ.2 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரத்து 523 மதிப்பில் 24,023 சதுர அடி பரப்பில் வேளாண் வீட்டுமனை, ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் 7,750 சதுர அடியில் வீடு என மொத்தம் ரூ.8 கோடியே 97 லட்சத்து 80 ஆயிரத்துக்கு 693 அசையா சொத்துகளும் உள்ளன. இதுதவிர ரூ.1 கோடியே 16 லட்சத்து 99 ஆயிரத்துக்கு வங்கி, நிதி நிறுவனங்களில் கடன்கள் உள்ளன.
அவரின் கணவர் சந்திரசேகர் பெயரில் ரூ.57 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அசையும் சொத்துகளும், மகள் நித்திலாவுக்கு ரூ.68 லட்சத்து 58 ஆயிரத்து 500 மதிப்பில் 1,247 கிராம் தங்க நகைகளும், ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் 9.75 கிலோ வெள்ளிப் பொருள்கள் என ரூ.1 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்துக்கு அசையும் சொத்துகள் உள்ளதாகவும் கூறி உள்ளார். கணவர் சந்திரசேகர் பெயரில் ரூ.2 கோடியே 67 லட்சத்துக்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும், ரூ.55 லட்சத்துக்குக் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 286 மதிப்பில் அசையும் சொத்துகளும், கணவர் செளந்தரராஜனுக்கு ரூ.3 கோடியே 92 லட்சத்துக்கு அசையும் சொத்தும், மகள் பூவினி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 61 ஆயிரத்துக்கு அசையும் சொத்துகளும் உள்ளன.
தமிழிசைக்கு ரூ.60 லட்சத்துக்கும், கணவர் செளந்தரராஜனுக்கு ரூ.13 கோடியே 70 லட்சத்துக்கும், மகள் பூவினிக்கு ரூ.70 லட்சத்துக்கும் அசையா சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வங்கி, நிதி நிறுவனங்களில் தனது பெயரில் ரூ.58 லட்சத்து 54 ஆயிரத்துக்கும், கணவர் பெயரில் ரூ.3 கோடியே 35 லட்சத்துக்கும், மகள் பூவினி பெயரில் ரூ.3 கோடியே 41 லட்சத்துக்கும் கடன் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ் அணி! - 5 Nomination File O Panneerselvam