சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்.19ல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸ், சின்னமலை, வெங்கடப்புரம் ஆகியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அவருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் இடையே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர்: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தோம். பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது மக்களும், குறிப்பாக பெண்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெள்ளத் தெளிவாக இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் விடியா திமுக அரசு, அவர்களின் ஒட்டுமொத்த சேமிப்பை திருடும் அரசாக இருக்கிறது.
2021 ஆம் ஆண்டின் விலைவாசியையும் தற்பொழுது உள்ள விலைவாசி உயர்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். பருப்பு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இரண்டரை மடங்கு விலை உயர்ந்துள்ளது. திமுக அரசால் மக்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை கஷ்டமாக உள்ளது. மக்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரக்கூடிய மின்சார கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என தவித்துக் கொண்டுள்ளனர்.
2000 ரூபாய் வந்த மின்சார கட்டணம் தற்போது 5000 ரூபாய் என வருகிறது. தண்ணீர் கட்டணம், கழிவு நீர் கட்டணம், சொத்துவரி போன்றவற்றையும் உயர்த்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரை மாநிலத்தில் சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் எதிர்காலத்தில் இளைஞர்கள் பாதிக்க கூடிய வகையில் போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. போதை வஸ்துகளை சப்ளை செய்யக்கூடிய மாபியாக்கள் திமுக குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளனர் என்பதையும் மக்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர்.
மகளிர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்படக்கூடிய நிலையும், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடு இருப்பதால் திமுக அரசு மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய அலை இருக்கிறது. மக்கள் அதிமுக மற்றும் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். ஒரு திட்டத்தை திமுக செயல்படுத்துவது போல் செயல்படுத்தி அதனைத் தொடர்ந்து மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கும் வேலை செய்கிறது.
ஒரு வீட்டில் இருக்கக்கூடிய சேமிப்புகளை அழித்து முடித்துவிட்டு வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு செய்துள்ளது திமுக அரசு. பெண்கள் வெளியில் செல்வதற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு தனி குடும்பத்தின் சேமிப்பை பறித்து விட்டு எந்த திட்டத்தை செயல்படுத்த போகிறார்கள். வாழ்க்கை நடத்துவதற்கு அமைதியான சூழ்நிலையும் குடும்பத்தில் சேமிப்பும் இருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மக்களுக்கு எதிரான நேர் மாதிரியான செயல்பாடுகளை திமுக அரசு செய்கிறது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் திமுக எம்.பி: தென் சென்னை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை பொருத்தவரை தொடர்ந்து பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து செயல்பட கூடியவர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என கூறுவது அவருக்கு தெள்ளத் தெளிவாக பொருந்தும். அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முடக்குகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் என அவரின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
பள்ளிக்கரணை சதுப்பு நேரத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கு 1200 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை முடக்கும் வேளையிலும், திட்டத்தை செயல்படுத்துவதில் எந்தவித அக்கறை செலுத்தாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இயற்கை சூழலை புரிந்து கொள்ளாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அங்குள்ள குப்பைக்கிடங்கை நூற்றுக்கு நூறு சதவீதம் அகற்ற வேண்டும். ஆனால் 30 சதவீதம் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் 2019 ஆம் ஆண்டு ஆங்கில நாளிதழக்கு அளித்த பேட்டியில், பெருங்குடியில் இருக்கும் குப்பைகளை ஒரு ஓரமாக சேர்த்து வைத்து விட்டு மீதமுள்ள இடத்தில் பூங்கா அமைப்போம் என கூறியுள்ளார். அவருக்கு இயற்கை பற்றிய புரிதல் இருந்தால் இது போன்று பேச மாட்டார் . பள்ளிக்கரணியில் மீட்கப்பட்ட இருபது சதவீதம் நிலத்தில் பூங்கா அமைக்கவும், கட்டிடம் கட்டவும், அருங்காட்சியகம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இயற்கை ஆர்வலர்கள் மிகப்பெரிய கொந்தளிப்பில் உள்ளனர். அந்த பகுதியில் தான் மழை நீர் அதிக அளவில் கொண்டு சேர்க்கப்பட்டு பூமிக்குள் செல்லும். திமுக வேட்பாளர் ஒரு திட்டத்தை புரிந்து கொள்ளாதவர் என்பது மட்டும் இல்லாமல், அதிமுக கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுபவர் என செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எம்.ஆர்.டி.எஸ், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றைவும், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களையும் சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொழுது கள்ளுகுட்டை போன்ற பகுதியில் பட்டா தருவேன் என கூறினார்.
ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து பொய் பிரச்சாரமாக செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுடன் பட்டா வாங்கி தருவேன் எனக்கு கூறிய அவர், அதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாதவர். பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினராகி ஐந்து வருடம் கடந்துவிட்டார். இப்பொழுது மக்கள் அவருக்கு எதிர்ப்பாக காத்துக் கொண்டுள்ளனர்.
சென்னையில் புயல் ஏற்பட்ட பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக நான் இல்லாவிட்டாலும், நொச்சிக்குப்பம் முதல் உத்தண்டி கடற்கரைப் பகுதியில் சென்று அவர்களுக்கு தேவையான உதவி செய்ததுடன், ஊர் தலைவர்களிடம் பேசி அவர்களின் கோரிக்கைகளை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தோம். திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்லும் பொழுது 5 வருடத்திற்கு முன்னர் உங்களை பார்த்தோம், தற்பொழுது எதற்கு வருகிறீர்கள் என கண்டன குரல் எழும்பி வருகிறது.
எப்போதும் திராவிடியன் vs திராவிடியன் தான்: அவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக அறிவித்தவுடன் எங்களுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது. பாஜகவை பொருத்தவரை மக்கள் பொருட்படுத்தவில்லை. எப்போதும் தமிழகத்தில் திரவிடியன் இடையே தான் களம். தமிழகத்தை பொறுத்தவரை நல்ல சக்தியான அதிமுகவுக்கும், தீய சக்தியான திமுகவுக்கும் தான் களம் உள்ளது. இந்த களத்தில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும். பாஜகவை பொறுத்தவரை நாங்களும், மக்களும் அதைப் பற்றி பேச மாட்டோம். தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் வாக்கு எவ்வளவு என்பது தெரியவரும்” என கூறினார்.