சென்னை: இந்தியாவில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் 14,500 பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் ஏற்கனவே அந்தந்த மாநிலங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையில் கல்வி வழங்குவதாகும்.
மாணவர்களிடையே பிற திறன்களையும் வளர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருவதால், அதன் அடிப்படையில் மத்திய அரசு தொடங்கும் இந்த பள்ளிகளுக்கு அனுமதிக்க தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இதனால் ஒருங்கிணைந்த இடைநிலைப் பள்ளிக்கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கு தமிழக அரசு தயக்கம் காட்டுவதால் நிறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பி.எம். ஸ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைவதற்கு ஏற்கனவே தலைமைச் செயலாளர் ஒப்புதல் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார்.
ஆனால், அதற்கான ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து போடவில்லை எனவும், அந்த திட்டத்தில் சில மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஒன்றிணைப்பா? - செல்லூர் ராஜு வைத்த ட்விஸ்ட்!