சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவரது ரசிகர் மன்றம், வழக்கமான ரசிகர் மன்ற செயல்பாடுகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவது வழக்கம்.
சமீப காலமாக நடிகர் விஜய் அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களின் போது அவர் கூறும் குட்டிக் கதைகள் அவரது அரசியல் பிரவேசத்தின் முதற்படியாக கூறப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலின் போது விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் போட்டியிட்டு வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். இதனால், விரைவில் விஜய் அரசியலில் இறங்குவார் என்ற கருத்து மீண்டும் வலுப்பெற்றது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியது மற்றும் அவர் நீண்ட நேரம் நின்று மாணவர்களுக்கு பரிசளித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், அவர் ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து பேசியதற்கு அரசியல்வாதிகளும் பதில் கருத்து தெரிவித்தனர். மேலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று நிவாரணமும் வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடுவது குறித்து இயக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், புதியதாக கட்சித் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் பெயர் பதிவு செய்வது தொடர்பாக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
மேலும், புதிதாக கட்சித் தொடங்கப்பட்ட உடன் செயலி மூலம் தொண்டர்களை இணைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களை இணைக்க பயன்படுத்தப்பட்டு வந்த செயலியை அரசியல் கட்சிக்கு ஏற்றார் போல மாற்றங்களைச் செய்து அதன் மூலம் கட்சிக்குத் தொண்டர்களை இணைக்க உள்ளதாகவும் கூறபட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் விஜய் கட்சித் துவங்க இருப்பதாக கூறப்படுவதால் அவர் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவாரா அல்லது அரசியல் சூழல்களை பார்த்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஈடுபடுவார என்ற வாதங்களும் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (பிப்.02) விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் கட்சியின் பெயர் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியத்திற்குள் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளும் தயார் நிலையில் இருக்கும்படி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் பெயர் அறிவித்த பிறகு எடுக்கப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் மாவட்ட நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியின் பெயரை அறிவித்த பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்கும் படியும், உடனடியாக 1 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் விஜய் இஸ்டாகிராமில் இணைந்த போது சில மணிகளிலேயே அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை மில்லியனைக் கடந்து சாதனை படைத்தது. அதே போல் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானதும் சடஹனை படைக்கும் வகையில் உறுப்பினர்களைச் சேர்க்க நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் X சமூக வலைத்தளத்தில் #தலைவர்விஜய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் 'NIA' அதிகாரிகள் சோதனை!