சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 31) துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இறுதி நாளான இன்று பல பிரபலங்களும், பொதுமக்களும் பார்வையிட ஆர்வர்த்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் இந்த இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபலங்களும், அமைச்சர்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “எத்தனையோ இடையூறு சவால்களுக்கு இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தை நடத்துகிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த கார் பந்தயத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விளையாட்டுத் துறையில் முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து செயல்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்” என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கூறுகையில், “பிரசாந்த் நடிப்பில் வெளியாகிய அந்தகன் திரைப்படம் வெற்றி அடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் பிரசாந்த் நடிப்பார்” என்றார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி கூறுகையில், “சென்னையில் இரவு நேரங்களில் நடக்கும் ஸ்ட்ரீட் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்ப்பதற்கு வந்துள்ளேன். மாலை 6 மணிக்கு மேல் நடைபெறவிருக்கறது. அதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.
மேலும் வேட்டையன் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ஆனால், அவர் சென்னை விமானத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'பாம்' மிக ஸ்பெஷலான படம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் அர்ஜூன் தாஸ் பூரிப்பு!