சென்னை: இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி இருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பலதரப்பிலிருந்தும் வரவேற்பு வந்தது. இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடினர். நேற்று (பிப்.13) டெல்லியில் நடந்த இந்த நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், “இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. எனது தந்தை, மற்றும் தாய் தேசிய வேளாண் அறிவியல் அகாடமி மாணவர்களுக்கு ஒரு பெற்றோர் உடன் இருந்த உணர்வை அளித்திருப்பார்கள். எனது சிறுவயது குறித்து எனக்கு ஞாபகம் வருவதெல்லாம், எங்கள் வீடு எப்பொழுதும் மாணவர்களால் நிறைந்திருந்தது. எனது தந்தை மரபியல் குழுவிற்குத் இயக்குநராக இருந்த போதிலும், காலையிலும் மாலையிலும் வீட்டில் மாணவர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
என் வீட்டில் பல வெளிநாட்டு மாணவர்களும் எனது தந்தையைச் சந்தித்தனர். நாங்கள் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடினோம். தேசிய வேளாண் அறிவியல் அகாடமி ஒரு கூட்டுக்குடும்பம் போல இருந்தது. எனது தந்தை விவசாயத்திற்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவில் இன்னும் மக்கள் பலரும் பொருளாதாரம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றில் இக்கட்டான நிலையில் உள்ளனர். அதில் துரதிர்ஷ்டமாக விவசாயிகளும் அவர்களின் குடும்பத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத நிலையில் உள்ளனர். நமக்கான உணவை விளைவிப்பவர்களே ஆரோக்கியமான, வளமான வாழ்க்கை வாழவில்லை.
பஞ்சத்தைப் பற்றி அதிகம் பேசியவர்களில் எனது தந்தையும் ஒருவர் என்று நினைக்கிறேன். இங்கு அனைவரும் கூறியது போல் அவர் எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனை கொண்டவராக இருந்தார். நான் ஒரு மருத்துவ விஞ்ஞானி. நாங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பிரச்சினை குறித்தே சிந்தித்தோம்.
ஒரு நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே தேவையானவை குறித்து அவரால் சிந்திக்க முடிந்தது. அதனால், ஐநா சபை அளவில் நடந்த கூட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தோம். அவர் மாணவர்கள், மாநிலத் தலைவர்கள் என அனைவரிடமும் சமமாகப் பழகினார். அவர் எப்படி அவ்வளவு நேரம் ஒதுக்குகிறார் என ஆச்சரியமாக இருக்கும். அவரை காண வேண்டும் என யாரும் மெயில் அல்லது கடிதம் அனுப்பினாலும் அல்லது நேரில் வந்தாலும் அவர்களைச் சந்திக்க மறுப்பேதும் இல்லாமல் அவர்களுக்காக நேரம் செலவிடுவார்.
மேலும், அவர் எதிர்காலம் குறித்த சிந்தனையின் காரணமாகவே 60, 70களிலேயே காலநிலை மாற்றம் குறித்து அதிகம் பேசிக் கொண்டிருந்தார். மேலும், அவர் இளைய தலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஏனென்றால் இளைய தலைமுறையினரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என அவர் நம்பினார்.
அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டபோது நானும் சகோதரியும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், ஒரு 6 மாதம் அல்லது 1 வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்போம். அவர் மகிழ்ச்சி அடைவதையும் பார்த்திருக்க முடிந்திருக்கும். நாடு அவரை பாரத ரத்னாவாக அங்கீகரித்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், அவர் நிம்மதியாக இருக்கும் இடத்தில் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அவர் வாழும் காலத்திலேயே பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், பசுமைப் புரட்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பங்காற்றியது போல வெண்மைப் புரட்சிக்கு பெரும் பங்காற்றிய அமுல் வர்கீஸ் குரியனுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.