மதுரை: மதுரை பரவை காய்கறி சந்தையில் காய்கறி கமிஷன் கடை நடத்தி வந்தவர் பின்னத்தேவர். சிவராமன், முத்துப்பாண்டி என்ற மகன்கள் மற்றும் மனைவியுடன், மதுரை செல்லூரில் உள்ள பூந்தமல்லி நகர்ப் பகுதியில் வசித்து வந்தநிலையில், பின்னத் தேவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
தந்தையின் பிரிவைத் தாங்க முடியாத மகன் சிவராமன் மிகுந்த வருத்தத்திலிருந்தார். சிவராமனுக்கு நேற்று(திங்கட்கிழமை) திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தில் தந்தையின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும் என நினைத்த சிவராமன், ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் செலவில் தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக உருவாக்கினார்.
இதையும் படிங்க: மதுரை புத்தகத் திருவிழாவில் இப்படி ஒரு வாய்ப்பா? குவியும் பள்ளி மாணவர்கள்!
சென்னையிலிருந்து மதுரை கொண்டுவரப்பட்ட தந்தையின் மெழுகு சிலையைக் கண்டதும் கண்ணீர் விட்ட மணமகன் சிவராமன், அவரது கண்ணத்தில் முத்தமிட்டும், ஆசீர்வாதம் பெற்றும் நெகிழ்ச்சியடைந்தார். பின்னர், தந்தையின் மெழுகு சிலை முன்பு மணமேடையில் மணமகள் சிவஹரணி கழுத்தில் தாலி கட்டினார்.
இதைக் கண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பலரும் பின்னத்தேவரின் மெழுகு சிலை அருகில் நின்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்