திருவள்ளூர்: மது போதையில் தாயை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் தேரடி அருகே உள்ள வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு கல்லூரி முடித்த நவீன் குமார் மற்றும் 10வது வரை படித்துவிட்டு வேலை செய்து வரும் லோகேஷன் என இரு மகன்கள் உள்ளனர்.
ஓட்டல்களில் கூலி வேலை செய்து வந்த வெங்கடேசன், மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெங்கடேசன் ஜயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று நேற்று காலை வீட்டிற்கு வந்த நிலையில், மாலை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இவ்வாறு மது அருந்தி வந்திருந்த வெங்கடேசன், மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மகன் நவீன் குமார், தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதை கண்டித்துள்ளார். தொடர்ந்து ஆத்திரமடைந்த மகன் நவீன் குமார், தந்தை மது அருந்திவிட்டு வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து, தந்தையின் கழுத்தில் குத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படுகாயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர், வீட்டுக் கதவை தாழிட்டுக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் வீட்டுக்குள்ளேயே விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர், நவீன் குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மது போதையில் தகராரில் ஈடுபட்ட தந்தையை மகன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இளவட்டக்கல் தூக்கிய இளைஞர் உயிரிழப்பு! காணும் பொங்கல் விழாவில் சோகம்!