திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களை கொடூரமாகப் பரம்பால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அந்த வீடியோவில் மாணவர்களை அருகில் வரவழைத்து அவர்களின் முதுகு பகுதியில் மிகக் கொடூரமாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் கடந்த மாதம் மாணவர்கள் வகுப்பு நேரத்தில் அயர்ந்து தூங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பயிற்சியில் மாணவர்களை தாக்கியதும் தெரியவந்தது.
அதேபோல் மாணவிகள் சிலர் தங்கள் செருப்புகளை அதற்குரிய இடத்தில் வைக்காத காரணத்தால், அந்த செருப்புகளை எடுத்து ஜலாலுதீன் மாணவிகளின் முகத்தில் வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இது குறித்து தகவல் அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், சம்பந்தப்பட்ட நீட் அகாடமியில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
ஆனால் அப்போது மாணவர்களை தாக்கிய அகாடமி உரிமையாளர் ஜலாலுதின் அங்கு இல்லை. இதை எடுத்து ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து பேசிய அவர், "இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்றும் அந்த விசாரணை முடிவில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும்" கூறியிருதார்.
இதையும் படிங்க: 'தப்பு பண்ணா மட்டும் பொய் கேஸ் போடுங்க'.. காதலியுடன் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிரிழப்பு..!
இந்தநிலையில் இன்று நெல்லை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நீட் அகாடமி நடத்தி வரும் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி சமூக நலத்துறை அலுவலர் தன்ஷிகா பேகம் மற்றும் பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி ஆகியோர் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவிகளின் விடுதிகளை ஆய்வு செய்தனர்.
அனுமதியின்றி பெண்கள் விடுதி: இந்த விடுதியில் சுமார் 30 மாணவிகள் தங்கி படித்து வந்துள்ளனர். அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆய்வின் போது, சம்பந்தப்பட்ட விடுதிக்கு அரசிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பின்னர், சமூக நலத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டதாகவும், தனியார் மையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதிக்கு அனுமதி பெறவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.