திருச்சி: திருச்சியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள ஆயுதங்களை பயன்படுத்தியும், தகாத வார்த்தைகளை ரீல்ஸில் பயன்படுத்தி லைக்குகளை அள்ளுவதிலும் சில இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்பொழுது திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் இளைஞர் ஒருவர் வீச்சு அரிவாள் ஒன்றை வைத்து போஸ் கொடுத்தும், புல்லட் ஓட்டிச் செல்லும் பொழுது கைத்துப்பாக்கியை எடுப்பது போன்ற காட்சிகளை வீடியோவாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கு ஒரு பெரிய கூட்டம் இருப்பதாகவும், தன்னை ஒரு கூட்டத்திற்கு தலைவன் போல் வீடியோக்கள் எடுத்து அதை பதிவிட்டு வருகிறார். எனவே, இதற்கு திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையினரிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இது போன்று வன்முறையைத் தூண்டும் காட்சிகளை பதிவிடும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோவை பதிவிட்ட அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான குணா ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், "சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது ஒரு வியாதி போன்று இருந்து வருகிறது. நிறைய பேர் பட்டா கத்தியோடு வலம் வருவது, தரையில் நெருப்பு வரும்படி ஆயுதங்களை வைத்து உரசுவது, பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டுவது, துப்பாக்கி வைத்து ரீல்ஸ் போடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தன்னை பிரபலபடுத்திக் கொள்வதற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது பிரபலமாக இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில், சமூக விரோதமான செயல்களில் இன்றைய இளைஞர்கள் ஈடுபடுவது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. மேலும், காவல்துறையினர் இது போன்ற இளைஞர்களை கண்காணிக்க வேண்டும். ஆயுதங்களோடு மக்களை அச்சுறுத்தல் செய்யும் விதமாக ரீல்ஸ் போடுவதை தடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவுகளை சைபர் க்ரைம் போலீசார் கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அழகு நிலையத்தில் பாலியல் தொழில்; சுற்றி வளைத்த வில்லிவாக்கம் போலீஸ்..! - CHENNAI SPA Sexual Work arrest