சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், தேவகோட்டை, இளையான்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் அதிக அளவில் பிரசவமும் நடைபெற்று வருகிறது. மேலும், கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் சிசுவின் இதயத் துடிப்பு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் போன்ற இதய பாதிப்புகளின் அளவை பரிசோதனை செய்ய எக்கோ பரிசோதனை மையம் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் இயங்கி வரும் எக்கோ பரிசோதனை மையத்தில் முழுநேரமும் பணியாற்றும் வகையில், மருத்துவர்கள் இல்லாத நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலரான கந்தசாமி கூறுகையில், “இந்த மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை மையம் செயல்படுகிறது. இந்த மையத்திற்கு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.
அவசர காலத்தில் பெரும்பாலான நோயாளிகள் வெளியே தனியாரிடம் செலவு செய்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எக்கோ பரிசோதனை மையத்தில் முழு நேரமும் பணியாற்றும் வகையில், தனி மருத்துவரை நியமிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூர்தர்ஷன் லோகோ விவகாரம்; மு.க.ஸ்டாலின், வைகோ கடும் கண்டனம்! - DD Logo Color Change Issue