விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக மாநாட்டு திடலில் உணவு வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விஜய்யின் அறிவுறுத்தலின்படி மாநாட்டு திடலில் உணவு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. காரணம் மதுரை அருகே நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டின் போது டன் கணக்கில் உணவுகள் வீணானது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதே போல் உணவு போன்ற எந்த ஒரு விஷயத்திலும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக விஜய் கவனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் உணவு ஆர்டர்கள் குவிந்துள்ளன.
இதையும் படிங்க: தவெக மாநாடு; சென்னை - விழுப்புரம் செல்ல மாற்று வழி.. திண்டிவனத்தை தவிர்க்க போலீஸ் திட்டம்?
ஸ்னாக்ஸ் பேக்: மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்நாக்ஸ் பேக்கில் ஒரு மிச்சர் பாக்கெட், ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் அரை லிட்டர் வாட்டர் பாட்டில், ஜூஸ் ஆகியவை கொடுப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் தவெக நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் (voluntears) ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வி. சாலை அருகே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஸ்நாக்ஸ் பேக் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், புதுவை, உளுந்தூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளிலும் இத்தகைய ஸ்நாக்ஸ் பேக்கிங் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.