திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் (Scoot) விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் பேஸ்ட் வடிவிலான 1 கிலோ 605 கிராம் எடை கொண்ட தங்கத்தை தனது தொடைகளில் (Knee caps) மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் மூதாட்டியை தாக்கி நகைகளை கொள்ளை அடிக்க முயன்ற பெண் கைது!