சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு துபாய் புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் எரிபொருள் நிரப்பும்போது என்ஜினிலிருந்து புகை வந்ததால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அரபு நாடான துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானம் மீண்டும் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு இந்த விமானத்தில் சென்னையில் இருந்து துபாய் செல்வதற்கு 314 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர்.
அப்போது விமானத்துக்கான ஏரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற்ற போது, திடீர் குளறுபடி காரணமாக அளவுக்கு அதிகமான எரிபொருள் நிரப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வெப்ப பாதிப்பால் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வரத் தொடங்கியது.
இதனால் பரபரப்படைந்த விமானிகள், உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர் உதவியுடன் கூடுதலாக நிரப்பப்பட்ட எரிபொருளை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து எரிபொருளை வெளியேற்றினர். அதோடு, விமான நிலைய ஓடுபாதையில் நின்ற தீயணைப்பு வண்டி விரைந்து செயல்பட்டு, விமானத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து என்ஜினில் ஏற்பட்டுள்ள வெப்பத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, வெப்பம் தணிந்து என்ஜினில் இருந்து வெளிவந்த புகைகள் நின்றுவிட்டன. பின்னர், விமான பொறியாளர்கள் குழுவினர் மற்றும் தலைமை விமானி, துணை விமானி ஆகியோர் விமானத்தை ஆய்வு செய்து, விமானத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, விமானத்தை இயக்கலாம் என அறிவித்தனர்.
இதற்கிடையே, 'பிசிஏஎஸ்' எனப்படும் 'பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி' அதிகாரிகள் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்பே விமானம் மீண்டும் இயக்கப்பட வேண்டும். அதுவரை விமானத்தில் பயணிகள் யாரும் ஏறுவதற்கு அனுமதி இல்லை என அறிவித்தனர். இதையடுத்து, விமானத்தில் பயணிக்க இருந்த 314 பயணிகளும் சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
அதே நேரத்தில் விமானப் பொறியாளர்கள் குழுவினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். இப்பணிகள் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் விமானம் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் 314 பேரும் ஏற்றப்பட்டு, விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், எரிபொருள் நிரப்பும்போது அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் யார் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எமிரேட்ஸ் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நேற்று இரவு சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானம் 'EK547' தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமானது. பொறியியல் பரிசோதனையைத் தொடர்ந்து, விமானம் துபாய்க்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு எமிரேட்ஸ் மன்னிப்பு கோருகிறது. எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது "என்றார்.