திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட செயல்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி, போர்க்களமாக மாறி வருகிறது.
ஆனால், சமக கட்சித் தலைவர் சரத்குமார் மட்டும், நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் நிலைப்பாடு குறித்தும், கூட்டணி குறித்து தற்போது வரை அறிவிக்காமலிருந்து வருகிறார். இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.26) திருநெல்வேலிக்கு வருகை தந்த அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபலத் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கூட்டணியுடன் சேர்வது என்பது குறித்த சரியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கடந்த 24ஆம் தேதி இது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் பேசினோம் என்றாலும், கட்சியின் மேல்மட்டக் கூட்டத்தில் இதுகுறித்த ஒரு தீர்க்கமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி பற்றி அறிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் எங்கள் இலக்கு.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் தற்போது உள்ளோம். 2026 இலக்குடன் எங்கள் கூட்டணி அமையும். ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் என்னென்ன பகுதியில் யார் யாரைச் சந்தித்தீர்கள்? என்னென்ன பிரச்சனைகளைப் பார்த்தீர்கள்? என்பதைப் பற்றிப் பதிவு செய்யும்படி கூறியுள்ளேன். அந்த பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதிக் கட்டம் எட்டப்படவில்லை. அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பாஜகவைச் சார்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமக கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
திருநெல்வேலியில் நான் போட்டியிடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் எனக்கு உள்ளது எனக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆகையால், திருநெல்வேலி தொகுதியில் நான் நிற்பதற்கு வாய்ப்புள்ளது. இன்னும் நாங்கள் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். அதுவரை காத்திருக்க வேண்டும். பண நாயகத்துக்கு அடிபணியாமல், ஜனநாயகத்திற்கு மக்கள் பணிய வேண்டும். சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற உறுப்பினர் போலப் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் சபாநாயகர் போல் பேச வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும்.. வழக்கின் பின்னணியும்!