கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், குரும்பபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். மேலும் சிலர் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் என்பவர் தனியாக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அதே அறையில் வெற்றிவேலுடன் தங்கியுள்ள சக மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன் பிரவீன் என்பவரின் செல்போனை சில தினங்களுக்கு முன்பு பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தீபக் என்ற மாணவர், அந்த கல்லூரியில் தொடர்பு இல்லாத வெளி ஆட்களை அழைத்துக்கொண்டு வெற்றிவேல் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால், அச்சமடைந்த அவர்கள் அறைக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாகவும், இதனிடையே சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், கோவில்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவர்களை தாக்கியது கோவை காபி கடை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25), வரதரயங்கா பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெர்மன் ராகேஷ் (24), கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (21), அன்னூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (21), ராகுல் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதுமட்டும் அல்லாது, அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்ரமசிங்கபுரம் நகராட்சித் தலைவருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம்!