சென்னை: சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், அப்பகுதியில் உள்ள மாடி வீடு ஒன்றில் மனைவி பிரியா, மகன் விஷால் மற்றும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு தியாகராஜன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், அவரது மனைவி பிரியா, மகன் விஷால் மற்றும் அவரது தாயார் ஆகிய மூவரும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் இருந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் ஹால் பகுதியில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி திடீரென கீழே விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு, மூவரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது கண்ணாடி உடைந்த இடத்தில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததைக் கண்டு மூவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக தாம்பரம் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்களும் விசாரணை நடத்தினர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அது ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு என்பது முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த துப்பாக்கி குண்டு எப்படி வீட்டிற்குள் பாய்ந்தது? அந்த பகுதியில் யாராவது உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனரா? அல்லது அதன் அருகே உள்ள விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, எங்கிருந்து சுடப்பட்டது என்ற கோணத்தில் அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக சோதனைகள் செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையின்போது, நேற்று சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள காந்தி சாலையில், ஒரு கட்டிடத்தைச் சுற்றி சுமார் ஆறு துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நேற்று கைப்பற்றிய துப்பாக்கி குண்டை வைத்து சரிபார்த்தபோது, இன்று கைப்பற்றிய குண்டுகளும் அதே வகையைச் சேர்ந்த ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கைப்பற்றிய துப்பாக்கி குண்டுகளையும் தடயவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் அனைத்தும், எந்த பகுதியில் இருந்து இங்கு வந்துள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு அருகே, தாம்பரம் விமானப்படை துப்பாக்கிச் சூடு பயிற்சி மையங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், அங்கு பயிற்சி பெற்றபோது குண்டு தவறுதலாக வெளியேறி உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதியைச் சுற்றி ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு.. போலீசார் திவிர விசாரணை!