விருதுநகர்: விருததுநகர் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. சிவகாசியின் அடையாளமாக இருப்பது பட்டாசு தொழில். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல்வேறு இடையூறுகள் தொடர்ந்து ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு முன்பாகவே பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் விதிமீறல்கள் காரணமாக, பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பல பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் வேதிவினை மாற்றத்தாலும், மனித தவறுகளாலும் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, பட்டாசு தொழில் மேன்மையடையவும், இடையூறுகள் விலகவும், விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்காகவும், பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், சிறப்பு பூஜைகள் மற்றும் யாகபூஜைகள் நடத்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருக்கோஷ்டியூர் பெருமாள் அடிகளார் மாதவன் தலைமையில், சிறப்பு யாகபூஜை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி.. பாஜக மீதான அதிருப்திக்கு காரணம் என்ன? - Thada Periyasamy