கோயம்புத்தூர்: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (The Southern India Mills Association) டெக்ஸ்ஃபேர் எனப்படும் ஜவுளி இயந்திரங்கள், உதிரிப் பாகங்களின் சர்வதேச கண்காட்சி கோவையில் வரும் 21ஆம் தேதி தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெறுகிறது. தற்போது இதுகுறித்து சைமா தலைவர் டாக்டர் சுந்தரராமன், ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "சைமா சார்பில், ஆண்டுதோறும் நடைபெறும் டெக்ஸ்ஃபேர் கண்காட்சி, 14வது வருடமாக இந்த ஆண்டு வரும் 21ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் தொடங்குகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 240 தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 260 அரங்குகளில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
இந்த கண்காட்சியை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளித் தொழில் சார்ந்த சுமார் 1 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என்றும், இந்த கண்காட்சி மூலம் சுமார் ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கிறோம். மேலும் இக்கண்காட்சியை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறந்து வைக்கிறார். இந்த கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்வையிடலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய நிலையில் சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி நுகர்வு குறைந்திருக்கிறது. ஆனால், விரைவில் அது மீண்டு எழும் என்று நம்புகிறோம். அவ்வாறு மீண்டெழும்போது விரைந்து வர்த்தகம் செய்ய ஏதுவாக மூலப்பொருள் குறைந்த விலையில் கிடைக்கவும், தரமாக கிடைக்கவும் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மின்சார கட்டண உயர்வால் ஜவுளி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஏப்ரல், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அதிகளவில் மிக நீண்ட இழை பருத்தி தேவைப்படும். ஆகையால், இந்த காலகட்டத்தில் இறக்குமதி மீதான 11 சதவீத வரி விதிப்பை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டில் சராசரியாக 3.30 கோடி பேல்கள் பருத்தி உற்பத்தி செய்யப்படும் நிலையில், சுமார் 50 லட்சம் பேல்கள் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் உள்நாட்டிலேயே தரமான பருத்தியை உற்பத்தி செய்யும் நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.