சென்னை: சென்னையில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அசோக் கூறும்போது, "நாங்கள் வெள்ளி மற்றும் தங்கத்தை ஆபரணங்களாக உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்து வருகிறோம். நகைக் கடைக்காரர்கள் தங்களுக்குத் தேவையான ஆபரணங்களைச் செய்வதற்கான மூலப்பொருட்களான தங்கம், வெள்ளியைக் கொடுப்பார்கள்.
அதனை ஆபரணமாகச் செய்து கடைக்காரர்களிடம் அளிக்கிறோம். ஆபரணங்களைக் கடைக்கு எடுத்துச் செல்லும் போது தேர்தல் பறக்கும் படையினர் பிடித்துக் கொள்கின்றனர். அதற்கான ஆவணங்களைக் காட்டினாலும், கருவூலத்தில் வைத்துவிட்டோம் என கூறுகின்றனர். அதனை மீண்டும் பெறுவதற்கு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் எங்களுக்கு நகைக் கடைக்காரர்கள் ஆபரணங்களைச் செய்வதற்குத் தங்கம் , வெள்ளியைத் தராமல் இருப்பதுடன், வேலையை வழங்காமலும் உள்ளனர்.
இன்றைய நிலையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. ஆபரணங்களைச் செய்பவர்களுக்குத் தினமும் வேலைக்குச் சென்றால் தான் கூலி என்ற நிலை உள்ளது. தினக்கூலிக்கு வேலைச் செய்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மோட்டார் வாகனங்களைச் சோதனை செய்வதற்கு நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போல், நாங்கள் அளிக்கும் ஆவணங்களையும் பரிசோதனை செய்து, உடனடியாக பொருட்களை அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்! - RS Bharathi