சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து, செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 10 தனி படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், நேற்று இரவே ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் போலீசில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: ''கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் என்பவரை ஆம்ஸ்ட்ராங் உதவியோடு வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பழி வாங்க ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு திட்டமிட்டதாகவும் தெரிய வந்தது.
வாக்குமூலம்: ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது ஒரு வருட நினைவு நாள் வருவதற்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு தீவிரமாக திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்ததாக ஆற்காடு பாலு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பிறகு அவரது சகோதரர் ஆற்காடு பாலுவையும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் ஜெயபால் என்பவர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால், பாலுவின் மனைவி பயத்தில் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்ணன் கொலை செய்யப்பட்டும், மனைவி பிரிந்து சென்றும் மன உளைச்சலில் இருந்து வந்த ஆற்காடு பாலு, இதற்கு காரணமாக இருந்த ஆம்ஸ்ட்ராங் தன்னையும் கொலை செய்து விடுவார் என்று எண்ணி, அதற்கு முன்பு அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும், கன்னிகாபுரம் தென்னரசு கொலை வழக்கில் ஆற்காடு பாலு சிறையில் இருந்தபோது, அவருடன் நட்பாக பழகியவர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் கைதான எட்டு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்ற புலனாய்வு துறையில் மூன்று முறை செம்பியம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் இந்த தகவலை காவல்துறையினர் பொருட்படுத்தாமல் இருந்ததால் தான் இதை கொலை நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், கொலையாளிகள் கடந்த சில நாட்களாக ஆம்ஸ்ட்ராங் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்து அவர் எப்போது தனியாக இருப்பார் என்பதை முழுவதுமாக தெரிந்து கொண்டு நேற்றிரவு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போலச் சென்று கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சாவகாசமாக நோட்டம் பார்த்து, காத்திருந்து இந்த கொலையை செய்துள்ளார்கள் என்பது வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வருகிறது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!