சென்னை: பூவிருந்தவல்லியை அடுத்துள்ள சக்தி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மதியம் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
அப்போது அதிலிருந்து கேஸ் வெளியான நிலையில், அதனை கவனிக்காத தொழிலாளர்கள் தீ பற்ற வைத்துள்ளனர். இதனால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து, இதனால் வீட்டில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த ஐந்து பேர் மற்றும் சாலையில் நின்றிருந்த சிறுவர்கள் 2 பேர் என உட்பட ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், தீப் பற்றி எரிந்த சிலிண்டரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: கவரைப்பேட்டை பகுதி சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேசக்கரம்!
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தில் தொழிலாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை கவனக்குறைவாக தீ விபத்து ஏற்படும் வகையில் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் குமார் (52), ஜெகன் (45), சரஸ்வதி (64), ஷீலா (40), நீலக்குமார் (58) மற்றும் சிறுவர்கள் 2 பேர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிலிண்டர் வெடித்து, வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்