திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் அருகே புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடி உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது பாபநாசம் அருகே மலையடிவாரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு இறங்கி வருவதும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த சூழலில் பாபநாசம் அருகே வேம்பையாபுரம் என்ற கிராமத்தில் விவசாயி சங்கர் என்பவர் வளர்த்து வந்த ஆடு ஒன்றை கடந்த வாரம் சிறுத்தை தாக்கியது.
இதைத்தொடர்ந்து அனவன் குடியிருப்பு என்ற மற்றொரு கிராமத்திலும் விவசாயி ஒருவரின் ஆட்டையும் சிறுத்தை தாக்கியுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் இரண்டு பகுதியிலும் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்த நிலையில், முதலில் வேம்பையாபுரத்தில் ஒரு சிறுத்தை பிடிபட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் அனவன் குடியிருப்பில் ஒரு சிறுத்தையும், மீண்டும் அதே வேம்பையாபுரத்தில் மற்றொரு சிறுத்தையும் என மூன்று சிறுத்தைகள் பிடிபட்டன. அடுத்தடுத்து சிறுத்தைகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
பிடிபட்ட சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டுபோய் விடப்பட்டன. இதற்கிடையில், வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாகு, நேற்று திருநெல்வேலியில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்படும் வீடியோ காட்சி ஒன்றினை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், 'சுதந்திரத்தின் நாலு கால் பாய்ச்சல்' என்ற பெயரில் சில கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார்.
மேலும் சிறுத்தை பிடிக்க ஒத்துழைப்பு கொடுத்த ஊர் மக்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அனவன் குடியிருப்பில் நான்காவது சிறுத்தை ஒன்று பிடிபட்டுள்ளது. ஏற்கனவே, மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், அனவன் குடியிருப்பில் மேலும் சில சிறுத்தைகள் நடமாடுவதை ஊர்மக்கள் பார்த்துள்ளனர்.
குறிப்பாக, நேற்று அனவன் குடியிருப்பு கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள உயர்ந்த பாறையில் இரண்டு பெரிய சிறுத்தைகள் நேருக்கு நேர் நிற்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பெயரில், அந்த பாறை பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில் நேற்று ஒரு சிறுத்தை சிக்கி உள்ளது. தொடர்ந்து இந்த சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இரண்டு சிறுத்தைகளில் ஒன்று மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளதால் மற்றொன்று சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இது தவிர, சிறுத்தைகள் இருக்கிறதா? என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை நான்கு சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. இதனிடையே, டிஸ்கவரி சேனல் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அனவன் குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதியினர் அச்சத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் பிடிபட்ட சிறுத்தை குறித்து நெகிழ்ச்சியோடு வீடியோ பதிவிட்ட சுப்ரியா சாகு! - Supriya Sahu IAS