திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நகர்ப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சுமார் 4 கிலோ மீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு இடையில் மிகவும் நெருக்கமான பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலப் பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்த மேம்பாலப் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியாற்றி வரும் நிலையில், நேற்று (செப்.21) மாலை திடீரென மேம்பாலத்தின் ஒருபக்கம் கட்டப்பட்ட இரும்புச் சாரம் 20 மீட்டர் தொலைவிற்கு இடிந்து விழுந்துள்ளது.
இதில், மேம்பாலப் பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மேம்பாலப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர், இந்த விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் வருவாய்த் துறையினர், இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த விளக்கத்தில், "நேற்று இரவு (செப்.21) சாரத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாலேயே சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது, கட்டுமானப் பணியில் குறை இல்லை. விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகிறோம்.
மேலும், சரிந்து விழுந்த இரும்பு சாரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சாரம் சரிந்து விழுந்த பகுதியில் கேஸ் வெல்டிங் மூலம் அகற்றப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் பணிகள் துவங்கப்படும்.
இதுமட்டுமல்லாது, மேம்பாலத்தின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். விளக்கம் பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரை வரவேற்று கேரளாவில் பேனர்! - KAKKA THOPPU BALAJI KERALA POSTER