சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை கடுமையான வெயில் கொளுத்தி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலை 4.30 மணிக்கு மேல், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, இருள ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், சென்னை விமான நிலையத்தில், வருகை மற்றும் புறப்பாடுக்காக காத்திருந்த விமானச் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.
அந்தவகையில், கோவை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை வந்து, தரையிறங்க வந்த விமானங்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல், வானில் வட்டம் அடித்து பறந்து கொண்டு தத்தளித்தன.
சுமார் 15 நிமிடங்களாக நீடித்த சூறைக்காற்று மற்றும் இடி, மின்னல் ஓய்ந்த பிறகு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தரை இறங்கின. அதேபோல், அந்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படக் காத்திருந்த இலங்கை, ஜெட்டா, ராஞ்சி, விசாகப்பட்டினம், ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 10 இடங்களுக்குச் செல்லவிருந்த விமானங்கள், தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
அந்தவகையில், சென்னையில் திடீரென மாறிய வானிலையால், சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வருகை மற்றும் புறப்பாடு என மொத்தம் 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த நான்கு தினங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை!