சேலம்: சேலம் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வி என்பவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது மகன் மற்றும் நண்பர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை சிலர் கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவற்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை வேண்டியும் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அழகாபுரம் போலீசாருக்கு, கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நபர்கள் சேலம் அய்யந்திரு மாளிகை பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞர்களையும் மீட்டனர்.
மேலும், அவர்களது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததை அடுத்து, மூவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அழகாபுரம் போலீசார் கூறுகையில், "ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சூரியமூர்த்தி - செல்வி தமபதியின் மகன் வெங்கடேஷ் (29) என்பவர் தொழில் ரீதியாக சேலம் வந்துள்ளார்.
சேலம் அழகாபுரம் கான்வென்ட் ரோட்டில் உள்ள அவரது உறவினரான அந்தோணி ராஜ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கன்னங்குறிச்சி 13வது வார்டு திமுக செயலாளர் மகேந்திரன் அறிமுகமாகி உள்ளார். அதனை அடுத்து, மகேந்திரன் கோயம்புத்தூர் அடுத்த காரமடையில் 16 பிளாட் போட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த நிலத்தை 2 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, முதல் தவணையாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மகேந்திரனின் வங்கிக் கணக்கிற்கு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே, தொழில் சம்பந்தமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி மகேந்திரனிடம் 27 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
ஆனால், மகேந்திரன் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை என்று கூறி வெங்கடேஷிடம் கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, கடந்த 30ஆம் தேதி இரவு மகேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பணத்தைக் கேட்டு வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
மேலும், அவர்களை தனி அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள எனது தாய் செல்விக்கு வெங்கடேஷ் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வெங்கடேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னங்குறிச்சி 13வது வார்டு திமுக செயலாளர் மகேந்திரன் (53), முருகன் (31), விஜய் இருதயராஜ் (32), மகேந்திரன் (47), சதீஷ் பாண்டியன் (55), அருண் பிரபாகரன் (29), கார்த்தி (29), பிரவீன் குமார் (22) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் டிரைவர் தினேஷ் குமார் (28) ஆகிய 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவில்பட்டியில் ஆடுகள் திருட்டு.. கைதான இளைஞர்கள் சொன்ன பகீர் காரணம்.. வைரலாகும் சிசிடிவி!