திருநெல்வேலி: நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி பட்டப்பகலில் தீபக் ராஜா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா (30) என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை, நெல்லை மாவட்டம், தாழையூத்தில் நடைபெற்ற கட்டிட கான்ட்ராக்டர் கண்ணன் கொலை, இது தவிர விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் மீது சாதி மோதல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், தீபக் ராஜா மே 20 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றபோது மர்ம கும்பலால் மிக கொடூரமாக விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சம்பவத்தன்று தீபக் ராஜா, தனது காதலிக்காக தனியாக வெளியே வந்தபோது, எதிராளிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து, தீபக் ராஜாவின் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
எனவே, நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தியின் உத்தரவின் பேரில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் நேற்று முன்தினம் ஐந்து பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர். ஆனால், அந்த ஐந்து பேர் யார்? அவர்கள் பெயர்? உள்ளிட்ட விவரங்கள் என எதையும் போலீசார் வெளியிடவில்லை. இந்நிலையில் 5 பேரில் நான்கு பேரை தற்போது போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அதன்படி நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஐயப்பன், நெல்லை மேல நத்தத்தைச் சேர்ந்த முத்து சரவணன் மற்றும் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில், தற்போது கைதான நான்கு பேரும், நேரடியாக தீபக் ராஜாவை கொலை செய்யவில்லை என்பதும் இவர்கள் கொலை நடந்த போது அருகில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் - RTI About Tirunelveli Murder Cases