சென்னை: சென்னை பெருநகரில் போதைப் பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு விதமான போதைப் பொருட்களை 1கடத்தி வருபவர்களையும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறை குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோயம்பேடு காளியம்மன் கோயில் ரோடு மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இவரின் பெயர் ஞானபாண்டிஸ்வரன் மற்றும் தீனதயாளன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: காரில் வந்து ஆடுகளை திருடிய மர்ம கும்பல்.. நாகையில் வைரலாகும் சிசிடிவி!
அதேபோல், அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கிண்டி ரயில்வே நிலையம் முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா வைத்திருந்த சக்காரியா என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனிடையே, எம்ஜிஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த கிஷோர்குமார், சந்தோஷ், விக்னேஷ், ராஜபாண்டி, அபிஷேக், சதீஷ்குமார் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா மற்றும் 80 மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகளில், 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 19.3 கிலோ கஞ்சா மற்றும் 80 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலி கண்முன்னே காதலன் கொடூர கொலை.. நெல்லையில் பகீர் சம்பவம்!